தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண் ரயில்களில் சோதனைகள் செய்வது, விழாக்கள், உறவினர் வீடுகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் காவல்துறை உடையில் உலா வந்து செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார்.
போலி காவல்துறை அதிகாரியாக ஏமாற்றிய இப்பெண்ணை ஏன் ஓராண்டாக கண்டுபிடிக்க முடியவில்லை?
என்ன நடந்தது?
நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்தவர் ஜடலா மாளவிகா. சிறுவயதில் இருந்தே எஸ்.ஐ. ஆக வேண்டும் என்பது மாளவிகாவின் கனவு. மாளவிகாவை போலீஸ் அதிகாரியாக பார்க்க அவரது பெற்றோரும் விரும்பினர்.
மாளவிகா நிஜாம் கல்லூரியில் வேதியியலில் எம்.எஸ்சி முடித்துள்ளார். 2018-ல், ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தார்.
இருப்பினும், கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக உடல் தகுதி தேர்வில் அவர் தகுதி பெற முடியவில்லை. எனவே, அவர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெறவில்லை.
ஆனால், அவர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், விரைவில் வேலை கிடைக்கும் என்றும் உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் நம்பினர்.
“உடல் தகுதித் தேர்வில் அவர் தோல்வியடைந்தார். எனவே, தகுதித் தேர்வுக்கு தகுதி பெறவில்லை. கடந்த ஆண்டு தனக்கு வேலை கிடைத்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பக் காரணங்களால் சம்பளம் வரவில்லை, விரைவில் சம்பளம் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்” என்று ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.பி. ஷேக் சலிமா பிபிசியிடம் தெரிவித்தார்.
போலீஸ் உடை, போலி அடையாள அட்டை
கிட்டத்தட்ட ஒரு வருடமாக மாளவிகா போலி எஸ்.ஐ-யாக வலம் வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.ஐ.யின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் போலீஸ் உடையில் என்ன இருக்கும் என்பது குறித்து அவர் அறிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் தான் அவருடைய சீருடை தைக்கப்பட்டது. ரயில்வே காவல்துறையின் லச்சினை, நட்சத்திரக் குறியீடுகள், தோள்பட்டை பேட்ஜ், பெல்ட் மற்றும் ஷூக்கள் செகந்திராபாத்தில் வாங்கப்பட்டன. அதன்பிறகு, விசாகா பிரிவில் தான் பணிபுரிவது போன்று போலி அடையாள அட்டையையும் உருவாக்கியுள்ளார்’’ என போலீசார் தெரிவித்தனர்.
ஒரு வருடமாக நல்கொண்டா-செகந்திராபாத் வழித்தடத்தில் போலி எஸ்.ஐ.யாக அவர் ஏமாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தாலும், அவர் 2019 ஜனவரி 3-ம் தேதியே போலி அடையாள அட்டையை உருவாக்கியுள்ளார். அட்டையில் ஜே. மாளவிகா, சப்-இன்ஸ்பெக்டர் என எழுதப்பட்டுள்ளது. MR5732019 என்ற பிரத்யேக எண்ணும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய ரத்தப்பிரிவும் முகவரியும் பின்புறம் எழுதப்பட்டிருக்கும்.
மகளிர் தினத்தன்று கௌரவிக்கப்பட்ட மாளவிகா
மார்ச் 8 அன்று நல்கொண்டாவில் அமைப்பு ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின கொண்டாட்டத்திலும் மாளவிகா போலீஸ் உடை அணிந்து பங்கேற்றார். அந்த அமைப்பினர் அவரை கௌரவித்தனர்.
”எதையோ ஒன்றை சாதிக்கத்தான் பெண்கள் வெளியே செல்கின்றனர். என் மனைவி இதை சாதிப்பாள்.. என் குழந்தை இதை சாதிக்கும் என்று நம்பி வெளியே அனுப்புங்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்.. சமூகத்தில் அவர்கள் வளரட்டும்..” என அந்நிகழ்வில் பேசியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
போலீஸிடம் சிக்கினால்…
மாளவிகா ரயில்களில் சோதனை செய்வதை போலீசார் கண்டுபிடித்தனர். குறிப்பாக, பழநாடு எக்ஸ்பிரஸில் அவர் சோதனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. ஏன் அவரை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான காரணங்களை எஸ்.பி. சலீமா விளக்கினார்.
”போலீசார் வருவதை அவர் கவனித்தால், உடனடியாக ஜெர்கின் (ஜாக்கெட்) அணிந்து கொள்வார். இதனால், அவர் போலீஸ் சீருடையில் இருப்பதை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. மேலும், அவர் எந்த ரயில் நிலையத்தில் அமர்ந்து பணிபுரிந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் பெரிய ரயில் நிலையத்திற்கு பதிலாக சிறிய ரயில் நிலையத்தில் இருந்திருக்கலாம். பெரிய ரயில் நிலையங்களுக்கு சென்றால் அங்கு எஸ்.ஐ. அளவிலான அதிகாரி இருப்பார். அங்கு சென்றால் சிக்கிவிடுவோம் என்பதற்காக சிறிய ரயில் நிலையங்களை தேர்ந்தெடுத்திருக்கலாம். மாளவிகா மோசடி செய்தாரா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என கூறினார்.
போலீஸ் உடையிலேயே வலம் வந்த மாளவிகா
மாளவிகா எங்கு சென்றாலும் போலீஸ் உடையில்தான் செல்வது வழக்கம். போலீஸ் உடையில் கோவில்களுக்கு செல்வதால், அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.
உறவினர் திருமணங்களில் சீருடையில் கலந்துகொள்வது வழக்கம். அவர் மிகவும் “பிஸி” யாக இருப்பதாகவும், பணியிலிருந்து நேராக வந்ததாகவும் உறவினர்களை நம்ப வைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ரயில்வே சோதனை என்ற பெயரில் இலவசமாக பயணம் செய்து வந்துள்ளார். சீருடையில் “ரீல்ஸ்” தயாரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். நடிகர் சுமனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மாளவிகா மீது சந்தேகம்
மார்ச் முதல் வாரத்தில் மாளவிகாவுக்கும், நார்க்கெட் பள்ளியைச் சேர்ந்த இளைஞருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர் ஐ.டியில் பணிபுரிந்து வருகிறார். ஆனால், நிச்சயதார்த்தத்தில் மாளவிகா போலீஸ் சீருடையில் கலந்துகொண்டதால் அந்த இளைஞருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அப்போதுதான் உண்மை தெரிய வந்தது. பிபிசியிடம் பேசிய எஸ்பி ஷேக் சலிமா, “நிச்சயதார்த்த நிகழ்வு முடிந்த பிறகு, ரயில்வே துறையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாளவிகா பெயரில் யாராவது வேலை செய்கிறார்களா என விசாரித்துள்ளனர். அதில், அப்படிப்பட்ட பெயர் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று தெரியவந்தது.
மேலும், “சிறப்புப்பிரிவு போலீசார், 10 நாட்களாக அவரை கண்காணித்து வந்தனர். மாளவிகா எங்கே போகிறார்… என்ன செய்கிறார்… என அனைத்தையும் ரகசியமாக ஆர்பிஎஃப் ஐஜியிடம் அறிக்கை சமர்ப்பித்தார். ஐஜி உத்தரவின்பேரில், செகந்திராபாத் ஜிஆர்பி போலீசார் மாளவிகாவை கைது செய்தனர். நல்கொண்டா ஆர்பிஎஃப் எஸ்ஐ பவன் குமார் ரெட்டியின் புகாரின் பேரில் மாளவிகா கைது செய்யப்பட்டார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மார்ச் 19 அன்று காலை மாளவிகா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மாளவிகா மீது ஐபிசி பிரிவு 170 (அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல்), 419 (ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஐ சீருடை, ஆர்பிஎஃப் லச்சினை, நட்சத்திரங்கள், ஆர்பிஎஃப் தோள்பட்டை ஸ்டீல் பேட்ஜ்கள், பெயர் பலகை, ஷூ மற்றும் பெல்ட் ஆகியவை கைப்பற்றப்பட்டன. லேமினேட் செய்யப்பட்ட அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டது.
போலி போலீசாரை அடையாளம் காண்பது எப்படி?
கடந்த காலங்களில் அதிகாரிகளாக காட்டிக்கொண்டு பலர் பிடிபட்டுள்ளனர்.
“ஏதேனும் சந்தேகம் இருந்தால் அடையாள அட்டையைப் பார்த்தால் உடனே தெரியும்” என்று எஸ்.பி. ஷேக் சலிமா கூறினார்.
நடத்தை மற்றும் பேச்சு
போலி அதிகாரிகளின் நடத்தை மற்றும் உடையின் அடிப்படையில் அடையாளம் காண அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று ஐபிஎஸ் அதிகாரி விசி சஜ்ஜனார் தெரிவித்தார்.
“பொதுவாக அதிகாரிகளின் நடத்தை, உடை போன்றவற்றைத்தான் பார்க்கிறோம்.
போலி அதிகாரிகளின் நடத்தையில் நிச்சயம் மாற்றம் தெரியும். தேவையில்லாமல் பேசுவதையும், எதையோ எதிர்பார்த்து பேசுவதையும் அவதானிக்கலாம்.
உடையின் மூலம் அவர்களை அடையாளம் காண முடியும்” என்று சஜ்ஜனார் விளக்கினார்
“போலி அதிகாரிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்” என்றார்.
“முதன்மையாக இந்த வகையான குற்றங்கள் மோசடி நடைமுறைகளின் கீழ் வருகின்றன.
ஐபிசி பிரிவு 419, 420-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரிவு 419-ன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
420-ன் கீழ் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இது பிரிவு 170-ன் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காகவும் மாறும். இதன் கீழ், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்’’ என்றார்.
ஒருமுறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், வாழ்க்கையில் மீண்டும் அரசு வேலை பெறும் தகுதியை இழக்க நேரிடும் என்பதை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் சஜ்ஜனார்.