புதுச்சேரி வந்துள்ள பாராளுமன்ற நிலைக்குழு தலைவரிடம்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில்திமுக எம்.எல்.ஏ.,க்கள் மனு அளித்தனர் !

புதுச்சேரி வந்துள்ள பாராளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பிரிஜிலால் அவர்களை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: –
பாராளுமன்ற நிலைக்குழு புதுச்சேரி மாநிலத்திற்கு வருகைதந்து பார்வையிடுவதையும், ஒன்றிய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதையும் நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்றும் புதுச்சேரி மாநிலத்தின் எதிர்க்கட்சித் தகுதியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாநில அமைப்பாளர் என்ற முறையிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் புதுச்சேரி வளர்ச்சிக்கான கீழ்கண்ட கோரிக்கைகளை தங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த கோரிக்கைகளில் ஏதாவது நல்ல பலன் ஏற்படும் என்றால் தங்கள் குழுவிற்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகள்
• புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாநில பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் நீண்டநாள் கோரிக்கை புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து ஆகும். இதுபற்றி பலமுறை கடந்த 40 ஆண்டுகாலமாக 14 முறைக்கும் மேல் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க இக்குழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

• ஒன்றிய அரசின் 16–வது நிதிக்குழுவில் பங்கேற்பதில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் விளக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் எங்களுக்கு வரவேண்டிய நிதிப்பகிர்வு முன்பு இருந்த 75 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கு கீழாக குருகிவிட்டது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி முழுமையாக தடைபட்டிருக்கிறது. ஆகவே, இந்த 16–வது நிதிக்குழுவில் புதுச்சேரியை இணைப்பதற்கு இக்குழு ஒன்றிய அரசுக்கு பரிந்துரைச் செய்ய வேண்டும்.

• புதுச்சேரி மாநில பட்ஜெட்டின் நான்கில் ஒரு பகுதி பழைய கடனுக்கு வட்டி செலுத்தவும், கடன் தவணைகளை திருப்பி செலுத்தவுமே பயன்படுத்தப்படுவதால் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் தடை ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே, பழைய கடன்களை ஒன்றிய அரசு ரத்து செய்து மாநில வளர்ச்சிக்கு துணை நிற்க இக்குழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

• புதுச்சேரியின் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை தனியார்மயம் ஆக்குவதில் இருந்து விலக்கு அளித்து தொடர்ந்து புதுச்சேரி அரசே மின்துறையை நிர்வகிக்க ஒன்றிய அரசு முடிவு செய்வதற்கு இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• புதுச்சேரி அரசுக்கு சொந்தமானதும், வேலை வாய்ப்புக்களை அளித்து வருவதுமான சுதேசி, பாரதி, ஏஎப்டி ஆகிய பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்கோ, ஜெயப்பிரக்காஷ் நாராயணா கூட்டுறவு நூற்பாலைகள் ஆகியவற்றை புதுச்சேரி அரசு மீண்டும் புதுப்பித்து நடத்த வேண்டிய நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு வழங்க இக்குழு பரிந்துரைச் செய்ய வேண்டும்.

• இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் பட்டினிக்கிடக்கும் சூழல் உருவாகி வருகிறது. உணவு உரிமை சட்டப்படி அரசு ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்வதை ஒன்றிய அரசு தடுத்து வருவது ஜனநாயகத்திற்கு புறம்பானதாகும். ஆகவே, உடனடியாக ரேஷன் கடைகளை திறப்பதற்கான பரிந்துரையை இக்குழு மேற்கொள்ள வேண்டும்.

• புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகம் என்பது புதுச்சேரி மக்களின் நிலம் மற்றும் பல்வேறு உதவிகளை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆகவே, இதில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட பணியாளர்கள் தேர்வில் 25 சதவீதம் புதுச்சேரிக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் துவக்கத்தில் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை சமீப காலமாக மீறப்படுவது புதுச்சேரி மக்களுக்கு ஒன்றிய அரசு செய்கின்ற துரோகமாகும். ஆகவே, அனைத்து பாடத்திட்டங்களிலும், பணி நியமனங்களிலும் 25 சதவீத இடஒதுக்கீடு என்பதை இப்பல்கலைக் கழகம் உறுதி செய்ய இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• புதுச்சேரி பகுதி பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு அன்றைய இந்திய யூனியன் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களின் ஆலோசனைக்கு இணங்க இந்திய யூனியனில் இணைக்கப்பட்டது என்பது வரலாறு. அதனை அடிப்படையாக கொண்டுதான் ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரிக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநில மக்களுக்கு பெரும்பான்மை வேலை இடங்களையும், முழுமையான இலவச மருத்துவத்தையும் அளித்து வந்த ஜிப்மர் நிர்வாகம் தற்பொழுது வேலைவாய்ப்பு புதுச்சேரி மக்களுக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதும், மருத்துவத்திற்கு பணம் வசூல் செய்வதும் இந்த மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.

ஆகவே, துவக்க காலத்தில இருந்ததுபோன்று முழுமையான இலவச மருத்துவத்தையும், புதுச்சேரி மக்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டையும் ஜிப்மர் நிர்வாகம் உறுதிப்படுத்திட இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• புதுச்சேரி மாநிலத்திற்கு என்று மாநில தேர்வாணயத்தை ஏற்படுத்தி புதுச்சேரியை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

• சிறிய மாநிலம் என்ற அடிப்படையில் புதுச்சேரிக்கு சிஜிஎஸ்டி–க்கு விலக்கு அளித்து வியாபாரங்களை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சி ஏற்பட உதவிட வேண்டும்.

• புதுச்சேரியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் துறைமுகம் விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருப்பதை இக்குழு முழுமையாக ஆய்வு செய்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

• கிடப்பில் உள்ள சென்னை – நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை இரயில் தடம், திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட இக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *