நாடாளுமன்ற தேர்தல் – திமுக தேர்தல் அறிக்கைக்கு

புதுச்சேரி மக்கள் சார்பாக வரவேற்று
அமைப்பாளர் இரா. சிவா அறிக்கை !

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: –

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை தமிழ்நாடு – புதுச்சேரி மட்டுமின்றி இந்திய அளவில் அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கின்ற வகையில் அமைந்து மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

புதுச்சேரி மக்களுக்கு அவர்கள் இதுவரை எதிர்பார்த்த மாநில அந்தஸ்து தகுதியை பெற்றுக்கொடுப்போம் என்று உறுதியளித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மக்களுடைய எண்ணங்களை எந்த அளவிற்கு மதிக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. நம்முடைய பல்லாண்டுகால கோரிக்கையும், அந்த கோரிக்கைக்காக 16 முறைக்கு மேலாக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதுமான மாநில அந்தஸ்துக்கு திமுக தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கின்ற நேரத்தில் உடனடியாக மாநில அந்தஸ்து பெற்றுக் கொடுக்கின்ற உறுதிமொழியை திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றும் என்று தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதன் மூலம் உறுதியளித்திருக்கிறார்.

ஆகவே புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் இதனை முழு மனதோடு வரவேற்பதுடன், நமது கோரிக்கையை உயிர் மூச்சாக ஏற்று திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளித்ததற்காக கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அறிக்கையில் நமது மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதானமாக இணைத்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவிற்கு புதுச்சேரி மக்கள் சார்பாக புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மக்களுக்கு நலன் பயக்கும் பல்வேறு திட்டங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சமையல் எரிவாயு விலையை இன்றைக்கு விற்கும் 1000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்படும், பெட்ரோல் விலை 102 ரூபாயிலிருந்து 72 ரூபாயாக குறைக்கப்படும், டீசல் விலை 90 ரூபாயிலிருந்து 65 ரூபாயாக குறைக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் மரியாதையும், அதிகாரத்தையும் குறைத்து தன்னுடைய கைப்பாவையாக மாற்றி முழு அதிகாரத்தை தன்னுடைய கையிள் எடுத்துக்கொண்டு ஜனநாயக மரபுகளை குழிதோண்டி புதைக்கும் மாநில துணைநிலை ஆளுநரின் அடாவடிதனமான அதிகாரம் குறைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து மாணவர்களை விடுவிப்போம் என்று உறுதி கூறப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் செயல்படுகின்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 10 லட்சத்திற்கும் மேல் கடனுதவி அளிக்கப்படும். அனைத்து குடும்ப பெண் தலைவர்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை ஒன்றிய அரசு மூலம் வழங்கப்படும். இதுபோன்று பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது புதுச்சேரி மட்டுமல்லாமல் இந்திய தேசமளவில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று இத்தேர்தல் அறிக்கையை வரவேற்று கழகத் தலைவர் அவர்களை புதுச்சேரி மாநில கழகம் பாராட்டுகிறது.


திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை சொல்வதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆகவே, இன்றைக்கு சொல்லிய அத்தனை மக்கள் நலத்திட்டங்களையும் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றும் என்ற எதிர்ப்பார்ப்போடு வரவேற்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *