live indiatamil.com

“இந்தியாவின் குப்பைத் தொட்டியா தமிழகம்?’ – கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கல்பாக்கம் அனுமின் நிலைய வளாகத்தில் பாவினி (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd.,) நிறுவன தயாரிப்பான, 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை இன்று துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்திருக்கும் நிலையில், இது தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி’ என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சூழலியல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். PIB (Press Information Bureau) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்,தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மையப்பகுதியில் கோர் லோடிங் தொடக்கப் (initiation of core loading) பணியைப் பிரதமர் பார்வையிடுவார். இந்தியாவின் அணுமின் திட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் பணியை பிரதமர் பார்வையிடுவார். இந்த பி.எஃ.ப்.பி.ஆர்-ஐ பாவினி (Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கும் பி.எஃப்.பி.ஆர்-ல், முதல் கட்டத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மீண்டும் பதப்படுத்தப்பட்டு எஃப்.பி.ஆர்-ல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.இந்த சோடியத்தால் குளிரூட்டப்பட்ட பி.எஃப்.பி.ஆ.ர்-ன் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது நுகர்வதை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். இதனால் எதிர்கால வேக உலைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் தன்னம்பிக்கையை எட்ட உதவுகிறது. இந்த அணு உலை செயல்பாட்டிற்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் அதிவேக அணு உலையை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்!’ என்று குறிப்பிட்டிருந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த விழாவை, முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் அணு மின் உற்பத்தியால், அந்த பகுதியின் சுற்றுசூழல் கடுமையாக பதிக்கப்படும். இது மக்கள் நலனுக்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, “அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த உலை மூடப்பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுவுலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களை சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

ம.ம.க தலைவரான ஜவாஹிருல்லா, “2024 ஜனவரி 2 அன்று தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் கல்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள DFRP (Demonstration Fast Reactor Fuel Reprocessing Plant) எனும்“மாதிரி அதிவேக ஈனுலை எரிசக்தி மறுசுழற்சி மையம்” ஒன்றைத் திறந்து வைத்தார். இதுமட்டுமின்றி ஏற்கெனவே கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் Nuclear Installation Local Authority (NILA)யின் அடிப்படையில் நிலம் வாங்க, விற்க வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் எல்லைப் பரப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது சுற்றுவட்டார மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்விதப் பங்களிப்பும் தராத உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட ஓர் ஆபத்தான தொழில்நுட்பத்தை கல்பாக்கத்தில் தொடங்கும் மோடி அரசின் சூழ்ச்சியைத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல பச்சைத் தமிழகம் கட்சித் தலைவரான சுப.உதயகுமாரன் “இந்தியாவின் வட மாநிலங்களில் கோவில் பூசாரி வேடமிட்டு மக்களைக் கவர நினைக்கும் மோடி, தென் மாநிலங்களில் வளர்ச்சியின் நாயகனாக தன்னை முன்னிறுத்தும் முயற்சிதான் அவரது இன்றைய கல்பாக்கம் வருகை. கல்பாக்கத்தில் கடந்த இருபதாண்டுகளாகக் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் அதிவேக ஈனுலைத் திட்டம், கடந்த 1980-களில் திட்டமிடப்பட்டு, 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் 2010-ஆம் ஆண்டு மின் உற்பத்தித் தொடங்கும் என்றார்கள். பின்னர் 2017-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட வேலைகள் நடப்பதாகவும், இதோ வருகிறது மின்சாரம் என்றும் அறிவித்தார்கள். அதன்பிறகு 2020 ஆகஸ்ட் மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, 2021 டிசம்பரில் இறுதியாக, உறுதியாகத் தொடங்கும் என்றார்கள். இப்போது 2024-ஆம் ஆண்டு நடக்கிறது. இருபது ஆண்டுகள் கடந்தும் அதிவேக ஈனுலைத் திட்டம் எங்கேயும் போகவில்லை. ரூபாய் 3,500 கோடி செலவாகும் என்று தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 7,700 கோடி ரூபாயைத் தாண்டி செலவுகள் மட்டும் எகிறிக் கொண்டிருக்கின்றன. அயோத்தி கோயில் மட்டுமல்ல, அறிவியல் கோயிலும் கட்டுகிறோம் என்று தென்னிந்திய மக்களை நம்பவைக்க நடத்தப்படும் வெற்று தேர்தல் நாடகம் இது. இந்த அதிவேக ஈனுலை என்பது ஒரு தோல்விகரமானத் திட்டம்!” எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளரான வைகோ, “தமிழகத்துக்கு வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய பா.ஜ.க அரசு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணுஉலை, ஈனுலை என தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தான திட்டங்களையே திணிக்க நினைக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாதுகாப்பற்ற திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈணுலைகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தொடங்கிய நாடுகளே கைவிட்டுவிட்ட நிலையில் பாஜக அரசு அதனை இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்குவது தமிழர்களை அழித்தொழிக்கவே வழிவகுக்கும். 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் சாராசரியாக வெளியாகும் 27,000 கிலோ எடையுள்ள அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றினை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor-AFR) கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் ஏறத்தாழ 48000 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலகட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிட்டு, உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நிலம் மாறிவிடும். இது நேரடியாக தமிழர்கள் மீது இந்திய ஒன்றிய அரசு தொடுக்கின்ற சூழலியல் போரேயாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்த விழாவை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்திருப்பது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கல்பாக்கத்தில் இன்று பிரதமர் மோடி பார்வையிடும் ஈனுலை திட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. ஸ்டெர்லைட்டைப் போல மக்களை பாதிக்கும் எந்த திட்டமானாலும், அதை சட்டப்போராட்டத்தின் மூலம் தி.மு.க தடுத்து நிறுத்தும். ஈனுலை திட்டம் மக்களுக்கு ஆபத்தான திட்டம் என்பதால்தான், முதலமைச்சர் ஸ்டாலின் அதில் கலந்துகொள்ளவில்லை. இந்த ஈனுலை திட்டத்தை இவர்கள் குஜராத்திலோ, உத்திரப் பிரதேசத்திலோ ஏன் கொண்டு வரவில்லை ?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் இன்று தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் ஈனுலை திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *