தெலங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்த தமிழிசை, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டவரகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழிசைக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். அப்போது பேசிய தமிழிசை, “கமலாலயத்தில் கடந்த காலத்தில் எனக்கு கொடுத்த உறுப்பினர் அட்டையை, தற்போது மீண்டும் புதுப்பித்து பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும் கஷ்டமான முடிவை, இஷ்டமான முடிவாக எடுத்திருக்கிறேன். இனி 400 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பேன். கமலாலயத்திற்கு வந்தது உணர்வுபூர்வமான தருணம். கமலாலயத்தை நான் ஒரு ஆலயமாக கருதுகிறேன். உண்மையில் ஆளுநர் பதவியை விட, சாமான்ய மக்களின் கட்சியான பா.ஜ.கவின் உறுப்பினர் பதவியை நான் பெரிதாக கருதுகிறேன். ஆளுநராக புதுச்சேரியில் பல சவால்களை சந்தித்திருக்கிறேன்.
குறிப்பாக இரண்டு பொதுத் தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். அதே சமயம் நான் எந்த தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று தலைமை தான் முடிவு செய்யும். சாமானிய மக்களுக்கு உதவி செய்யவதற்காகவே, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். பா.ஜ.க-வைத் தவிர மற்ற கட்சிகளில், வாரிசு அரசியலை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த கட்சிகளும் பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், ஒரு சிறந்த கூட்டணியை அமைத்துக் கொடுத்திருக்கிறார். நம்முடைய கட்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வேறு மண்ணில் இருந்ததால்தான், என் மண் என் மக்கள் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போதிருக்கும் தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நட்பு ரீதியாக பழக நினைக்கவில்லை. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெற்று அறிக்கையாகவே பார்க்கிறேன். இந்த தேர்தல் அறிக்கையை பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு போல் இருக்கிறது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை, தோல்வி அறிக்கை’ என்றார்.