தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, M.L.A., அறிக்கை

சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தேர்தல் செலவுக்காக கட்டுக்கட்டாக கொண்டுசென்ற ரூ. 4 கோடி பணத்தை ரகசிய தகவலின்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக அவரது ஓட்டல் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயலாகும். தேர்தல் ஆணையம் ஒரு மக்களவை தொகுதிக்கு செலவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 95 லட்சத்தை விட அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மீது உரிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்துவதோடு அவர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வெற்றிபெற்று விடலாம் என்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளிடம் நிதியை குவித்த பாஜக, பெரும் நிதியை தேர்தலில் செலவிட திட்டமிட்டிருப்பது ரூ. 4 கோடி சிக்கியது அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் பாஜகவுக்கு தமிழக மக்கள் உரிய பாடத்தை தேர்தலில் புகட்டவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *